கருவுற்றிருக்கும் பெண்கள் பப்பாளியைத் தவிர்க்க வேண்டுமா?

Papaya in pregnancy

கருவுற்ற பெண்கள் பப்பாளிப் பழத்தை  சாப்பிடலாமா கூடாதா  என்பது ஒரு மிகப்பெரிய கேள்வி  ஆகும். சாப்பிடக்கூடாது என்றால் ஏன் சாப்பிடக்கூடாது?

அனைத்து அறிவியல் உண்மைகளையும் அலசி ஆராய்ந்தபின் , ஒரே வரியில் சொல்ல வேண்டுமெனில், நன்கு பழுத்த பப்பாளிப் பழத்தை கருவுற்ற பெண்கள் தாராளமாக சாப்பிடலாம்.ஆனால் பப்பாளிக் காய் அல்லது அரைகுறையாகப் பழுத்த பழத்தை சாப்பிடக்கூடாது.

கருவுற்றிருக்கும் காலத்தில் நன்கு பழுக்காத பப்பாளியை ஏன் சாப்பிடக்கூடாது?

  • கருப்பையில் சுருக்கங்களை உண்டாக்கலாம்..

நன்றாகப் பழுக்காத பப்பாளி அல்லது பப்பாளிக்காயில் லேடக்ஸ் எனப்படும் வேதிப்பொருள் காணப்படுகிறது. இதில் உள்ள பப்பைன் எனப்படும் என்ஸைம் , நமது உடலில் உள்ள பிரோஸ்டாகிலான்டின் மற்றும்  ஆக்ஸிடோசின் ஆகிய ஹார்மோன்களைத் தூண்டிவிடுகின்றது. இந்த ஹார்மோன்கள், கர்ப்பப் பையில் சுருக்கங்களை ஏற்படுத்துவதால் முன்னதாகவே பிரசவ வலி வந்துவிட வாய்ப்பு உள்ளது. பப்பாளி சாப்பிடுவதால் உண்டாகும் இந்த வலியின் காரணமாக கருச்சிதைவு ஏற்படவோ அல்ல்து கருவில் ஏதேனும் பிரச்சினைகள் உண்டாகவோ கூடும். உண்மையில் பப்பைன் என்பது பிரசவ வலியைத்தூண்டும் ஒரு பொருள் ஆகும். கர்ப்பப்பையில் பிரச்சினைகளை உருவாக்க மிகக்குறைந்த அளவிலான லேடக்ஸ் போதும் என்பது குறிப்பிடத்தக்கது.

  • கருவின் வளர்ச்சிக்குக் குந்தகம் விளைவிக்கலாம்...

பெப்ஸின் மற்றும் பப்பைன் ஆகிய என்சைம்கள் கருவின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்க கூடும் அல்லது கருவின் வளர்ச்சியைத் தடுக்கக்கூடும். பப்பாளிப்பழம் அல்லது பப்பாளி மரத்தின் பாகங்களான இலை அல்லது விதை போன்றவற்றை சாப்பிட்டால் கருவின் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்படும் என்று மருத்துவ ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

  • இரத்தக்கசிவு மற்றும் ஈடெமா (நீர்க்கட்டி) ஏற்படலாம்...

பப்பாளிக்காய் , இரத்தக் குழாய்களின்மேல் அழுத்தத்தை ஏற்படுத்துவதால், உடலின் உட்புறம் இரத்தக்கசிவு ஏற்படலாம். நஞ்சுக்கொடியில் இரத்தக்கசிவு ஏற்படவும் வாய்ப்பு உண்டு. இதனால் இரத்தஓட்டம் குறைந்து கருப்பையில் இருக்கும் கருவின் வளரச்சிக்கு ஊறு விளையலாம். நஞ்சுக்கொடியில் உண்டாகும் இரத்தக்காசிவின் காரணமாக கருத்தரித்திருக்கும் காலத்திலும் பிரசவத்தின்போதும் பிரச்சினைகள் எழக்கூடும். நஞ்சுக்கொடி உருவாகும்போதுகூட பப்பாளியால் பிரச்சினை தோன்றலாம்.

  • அதிகமான மலப்போக்கினால் கருச்சிதைவு நிகழலாம்

பப்பாளி மலச்சிக்கலுக்கு மருந்தாகப் பயன்படுகிறது என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். எனவே பப்பாளியை உண்பதால் மலம் வேகமாக வெளியேறக்கூடும். இதனால் கருச்சிதைவு ஏற்படக் கூடும்.பப்பாளியின் இந்த நல்ல மருத்துவ குணம்,  நமக்கு கேடு விளைத்திடலாம் .

  • மத்திய நரம்பு மண்டலத்தில் பாதிப்பு

பப்பாளியில் கார்பைன் என்ற வேதிப்பொருள் இருக்கிறது. இது நமது மத்திய நரம்பு மண்டலத்தில் பாதிப்பை விளைவிக்கலாம்.

  • ஈஸ்ட்ரோஜென் சுரப்பதைத் தூண்டும்.....

பப்பாளியில் உள்ள பப்பைன் எனப்படும் என்ஸைம் , மாதவிடாய் சுழற்சியை ஒழுங்குபடுத்தும் திறன் கொண்டது. தாய்மைக் காலத்தில் இதனை உண்பதால் , மாதவிடாய் ஏற்பட்டு பிறப்பு உறுப்பில் இரத்தம் வரக்கூடும். இது விரும்பத்தகாத ஒன்றாகும்.

பப்பாளி – ஓர் இயற்கையான கருத்தடை மருந்து..

மேலே கூறிய செய்திகளின் அடிப்படையில் , பப்பாளியை ஓர் இயற்கையான கருத்தடை மருந்து என்று கூறலாம். பப்பாளியில் உள்ள பப்பைன்,இனப்பெருக்கத்துக்குத் தேவையான பிரோஜெஸ்டெரோன் எனும் ஹார்மோன் சுரப்பதைத் தடுக்கிறது. ஆசிய நாடுகளில் உணவுப் பண்டங்களில் பப்பாளி அதிகம் சேர்த்துக்கொள்ளப்படுகிறது.ஆனால், பப்பாளி , ஓர் இயற்கையான கருத்தடை மருந்து என்ற கருத்து இன்னும் நிரூபிக்கப்படவில்லை.  

கருவுற்றிருக்கும்போது நன்கு பழுத்த பப்பாளியை சாப்பிடலாமா?

பழுத்த பப்பாளியில் இருக்கும் லேட்டக்ஸை சிலபேரால் ஏற்கவியலாது. அத்தகையவர்கள் நன்கு பழுத்தபழத்தைக் கூட  தவிர்த்துவிடுவது நல்லது.

இதற்கு முன்பு கருச்சிதைவு ஏற்பட்டிருக்கும் எனில் அத்தகைய பெண்களும் பப்பாளியை ஒதுக்கிவைப்பது நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள். பின்னால் வருத்தப்படுவதைவிட முன் ஜாக்கிரதையுடன் இருப்பது நல்லது அல்லவா? இதே போல கருத்தரிப்பதில் பிரச்சினை இருந்திருந்தாலும் குறைப்பிரசவம் ஆனவர்களும் கூட பப்பாளியைத்தவிர்ப்பதே நல்லது.

கருவுற்றிருக்கும் காலத்தில் சாப்பிடத்தகுந்த பப்பாளிப் பழத்தை எப்படித்  தேரந்தெடுப்பது?

கருவுற்றகாலத்தில் நாம் சாப்பிடுவதற்காகத் தேர்ந்தெடுக்கும் பப்பாளிப்பழம், நன்கு கனிந்து மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறத்தில் இருக்கவேண்டும். கையால் அழுத்தினால் மிகவும் மிருதுவாக இருக்கும் பழத்தையே உண்ண வேண்டும்.

Translated by S Natarajan

loader