பாலூட்டும் தாய்மார்களே! சின்னத் தவறுகளும் விபரீதமாகலாம்! கவனமாக இருங்கள்!

குழந்தைக்குப் பால் ஊட்டுவது உலகத்திலேயே மிகவும் இயற்கையான ஒரு செயலாகும். ஆனால் நாம் நினைப்பதுபோல்  அது அவ்வளவு எளிதான ஒன்றல்ல.

உங்கள் உடலில் பால் சுரப்பது என்பது , உங்கள் குழந்தையையும் உங்கள் மார்பகங்களையும்விட மிகவும் சிக்கலான ஒரு விஷயம் ஆகும்.

குழந்தையின் உதடுகளை மார்புக் காம்புகளில் பொருந்தச் செய்வதில் இருந்து   தொடர்ந்து  நல்ல முறையில் பால் சுரப்பபதுவரை அனைத்திலும் கவனமாக இருந்தால்தான் குழந்தைக்குப் பால் ஊட்டுவது இனிமையான அனுபவமாக இருக்கும்.ஒருவேளை சுரக்கும் பாலின் அளவு குறைகிறது என்று உங்களுக்குத் தோன்றினால் உங்களுக்கே தெரியாமல் நீங்கள் செய்த தவறுகள் கூட அதற்குக் காரணமாகலாம்.மேலும் படித்து கவனத்தில்கொள்ள இதோ சில விஷயங்கள் !

1.மார்பகத்தில் குழந்தையின் வாய் சரியாகப் பொருந்துதல்:

இது மிகவும் முக்கியமானதொரு விஷயம். இதை சரியாகக் கற்றுக்கொண்டு செயல்படுத்தவில்லையெனில் பால் ஊட்டும்போது வலி ஏற்படலாம். குழந்தை , முலைக் காம்புகளில் சரியாக உதடுகளைப் பொருத்தி பால் குடிக்கவில்லையெனில் பால் சுரப்பது குறையக்கூடும். எனவே இதை நன்றாகக்  கற்றுக்கொள்ளுங்கள்!    

2.சரியான இடைவெளிகளில் பால் ஊட்டுதல்:

குழந்தைக்குத் தேவையானபோதும் சரியான கால இடைவெளிகளிலும்  பால் கொடுக்கவேண்டும். அவ்வாறு தராமல் இருந்துவிட்டால் மார்பகங்களில் பால் நிறைந்து கட்டிக்கொள்ளலாம். அப்போது “feedback inhibitor of lactation” (FIL) எனும் புரோட்டீன் அதிகமாக சுரக்கக்கூடும். அதிகப்படியான பாலை நீங்கள் வெளியேற்றத் தவறிவிட்டால், நீங்கள் உணர்வதற்கு முன்பாகவே திடீரென பாலின் அளவு குறைந்துபோகக்கூடும். எனவே பால் சுரந்து மார்பகங்கள் நிறையும்வரை நீங்கள் காத்திருக்கவேண்டாம். சில பெண்களுக்கு "மார்பகங்கள் நிறைந்து இருப்பது " போன்ற உணர்வு கொஞ்ச நாட்களில் தானே மறைந்துபோகும். ஆனால் எக்காரணத்தை முன்னிட்டும் மார்பகங்கள் நிறையட்டும் என்று காத்திருக்காமல் அவ்வப்போது பால் கொடுங்கள்.

3.பாப்பா நீண்ட நேரம் தூங்கட்டும்!

பிறந்த குழந்தைகள் , நாள் முழுவதும் தூங்கக்கூடும்.ஆச்சரியம் ஊட்டும் அந்த உயிர்ப்பொருளை  பார்த்து ரசிப்பதிலேயே தாய்மார்கள் தங்களை மறந்துவிடுவார்கள். தொந்தரவு இல்லாமல் பாப்பா நீண்ட நேரம் தூங்கவேண்டும் என்று நீங்கள் நினைத்து பேசாமல் இருந்துவிட்டால் உங்கள் உடலில் சுரக்கும் பாலின் அளவு குறைந்துபோகக்கூடும். எனவே மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை பாப்பாவுக்குப் பால் புகட்டுங்கள்! இதனால்   உங்கள் உடலில் சுரக்கும் பாலின் அளவு குறையாமல் பார்த்துக்கொள்வதுடன், குழந்தையும் நோய் இல்லாமல் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதை உறுதி செய்திடுங்கள்! தூங்கும் குழந்தையை எழுப்பி மார்பகத்தில் பொருந்தச்செய்வது கொஞ்சம் கஷ்டமாக இருக்கலாம். எனவே டயபர் மாற்றுதல், குழந்தையைத் தூக்கிக்கொண்டு நடத்தல் , குழந்தையுடன் விளையாடுதல்  மற்றும் ஒரு முறைக்கு இரு தடவையாக பால் கொடுத்தல் என ஏதாவது செய்து குழந்தைக்கு பால் கொடுங்கள்.

4.இரவில் பால் தராமல்  இருந்துவிடுதல்:

பெரும்பாலான தாய்மார்கள் நாள்முழுதும் குழந்தையைக் கவனித்துக்கொள்வதால் சோர்வடைந்துபோகலாம். எனவே இரவு  நேரங்களில் அப்பாக்கள்  பொறுப்பேற்றுக்கொள்வது சகஜம்தான். ஆனால் இரவு முழுவதும் பால் தராமல் இருப்பதால் தேவைக்கு அதிகமாக பால் சுரப்பதாக நினைக்கும் உங்கள் உடல், பால் உற்பத்தியைக் குறைக்க முயற்சிக்கலாம். இதைத் தவிர்க்க வேண்டுமெனில் , உங்கள் பாப்பா பகல் நேரத்தில் எந்த அளவு பால் குடிக்கிறதோ அதே அளவு பாலைக் கறந்து  ஒரு பாட்டிலில் கொடுத்துவிடவேண்டும். இதனால் நீங்களும் நிம்மதியாக ஓய்வெடுக்கலாம். உங்கள் பாப்பாவுக்கும் இரவு நேரத்தில் போதுமான அளவு பால் கிடைத்துவிடும். சீக்கிரம் உறங்கச் செல்வதன் மூலம் தூக்கமிலா இரவுகளைத் தவிர்க்கலாம்.

5.சரியாக சாப்பிடாமல் இருத்தல் :

கடைசியான விஷயம் என்றாலும் முக்கியமான விஷயம் - சரியாக சாப்பிடுதல். போதுமான அளவு உணவு எடுத்துக்கொள்ளவில்லை என்றால் சுரக்கும் பாலின் அளவு குறையக்கூடும். புதிதாகப் பிறந்த குழந்தையை கவனிப்பதால் உங்கள் உறக்கம் தொலைந்துபோகலாம். உணவு உட்கொள்ளவும் மறந்து போகலாம்.ஆனால் நீங்கள் உங்கள் உடல் நலத்தின்மீது கவனமாக இருக்க வேண்டும்.

 

Translated by Narayanan Sethuraman

loader